இந்த பதிவு நான் ராம் குமார் ங்கிறவர் எழுதுனது, பிடிச்சிருந்தது ங்கிறது நாள ஷேர் பண்றேன்.......
"எங்கிருக்கிறார்கள் என தெரியாது. எங்கிருந்து வருகிறார்கள் என்றும் தெரியாது.. ஆனால் சரியாக பங்குனி கடைசி தினத்தில் எங்கிருந்தாவது வந்து குதித்து விடுகிறார்கள். ’தை முதல் நாள் தான் தமிழர்களோட புது வருசம்.. சித்திரை ஒன்னு இந்துக்களோட புது வருசம்’ என்று எதையாவது வந்து கத்திக்கொண்டு இருப்பார்கள்.. சித்திரை ரெண்டாம் தேதிக்கு பிறகு என்ன ஆனார்கள் என்று தெரியாது.. மீண்டும் அடுத்த ஆண்டு பங்குனி கடைசியில் வருவார்கள். ’தை தான் தமிழ்ப்புத்தாண்டு’ என்று தொண்டை கிழிய கத்துவார்கள். மீண்டும் போய் விடுவார்கள். அவர்களுக்கும், லேசான குழப்பத்தில் இருக்கும் சில தமிழர்களுக்கும் எனக்கு தெரிந்த விபரங்களை வைத்து விளக்க முயல்கிறேன்.
தமிழன் தை முதல் நாளை தன் விவசாயத்திற்கு உதவிய சூரியனுக்கும், மாடுகளுக்கும் பொங்கல் வைத்து கொண்டாடுகிறான். அது நன்றி சொல்லும் ஒரு பண்டிகை. நன்றியை நீங்கள் ஒருவருக்கு ஆரம்பத்திலா சொல்வீர்கள்? அதே போல் தை மாதம் பெரும்பாலும் அறுவடை நடைபெறும் மாதம். அறுவடையை யாராவது ஆரம்பமாக சொல்வார்களா என தெரியவில்லை. ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று பழமொழி இருக்கிறதாம். ஆம், அறுவடை முடிந்ததும் கையில் காசு புலங்கும் அதனால் வழி பிறக்கும். அதற்கும் புத்தாண்டுக்கும் என்ன சார் சம்பந்தம்? சித்திரையில் தான் மீண்டும் விவசாயத்தை ஆரம்பிப்பான் தமிழன். தன் தொழிலை வாழ்வை புதிதாக ஆரம்பிக்கும் காலத்தை புத்தாண்டாக கொண்டாடினான். அறுவடை செய்து எல்லாவற்றையும் வழித்து அள்ளுவதை புத்தாண்டாக கொண்டாட அவன் மடையன் இல்லை.
உலகின் பெரும்பாலான கலாச்சார, வரலாற்று சிறப்புகள் இருக்கும் நாடுகளில் இளவேனில் காலத்தில் தான் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இளவேனில் என்பது நமது சித்திரை, வைகாசி ஆகிய மாதங்கள் தான். தை மாதம் என்பது முன்பனிக் காலம். இதை பற்றி விபரம் தெரியாத பலரும், அரைகுறையாக எங்கோ கேட்டதை வைத்துக்கொண்டு தை மாதத்தில் தான் இளவேனில் காலம் வருகிறது என்கிறார்கள். பத்தாங்கிளாஸ் தமிழ் தான் ஒழுங்காக படிக்கவில்லை என்றாலும், ஒரு விசயத்தை சொல்லும் முன் நெட்டிலாவது தேடி சரி பார்த்த பின் சொல்லலாமே மக்களே? இளவேனில் காலம் சித்திரை வைகாசியில் வருவது. தமிழர்கள் வரலாறு மற்றும் கலாச்சார சிறப்பு உடையவர்கள் என்பது உண்மையானால் அவர்கள் சித்திரையில் தான் புத்தாண்டை கொண்டாடினார்கள் என்பதும், சித்திரை தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதும் உண்மை. உலக இலக்கியங்களில் பனிக்காலத்தை ஒரு முடிவாக/அழிவாக தான் உவமைப்படுத்துவார்கள்.. தை என்பது முன்பனிக்காலம். அப்படிப்பட்ட பனிக்காலத்திலா தமிழ்ப்புத்தாண்டை நாம் கொண்டாடியிருப்போம்?
இன்னும் சிலர் இருக்கிறார்கள்.. ’சித்திரை மாதம் இந்துக்களின் புத்தாண்டு, தமிழர்களுக்கு இல்லை’.. ‘தமிழ் ஆண்டுகளுக்கு பெயர் சமஸ்கிருதத்தில் இருக்கிறது’ என்று குட்டையை குழப்ப ஆரம்பிப்பார்கள். என் பெயர் ஒரு சம்ஸ்கிருத பெயர் தான்.. (திராவிடம் என்பதே கூட சமஸ்கிருத பெயர் தான் என்கிறார்கள் சில அறிஞர்கள்).. நான் ஒரு இந்து தான்.. இவர்களின் கூற்றுப்படி நான் தமிழன் இல்லையா? இவர்கள் என்னை தமிழன் இல்லை என்று கூட சொல்வார்கள். ஏன்னா ஒரு இந்துவை இந்த நாட்டில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இதையே வேறு விதமாக கேட்போம்.. ஜனவரி ஒன்றை கிறிஸ்தவ புத்தாண்டாக இவர்கள் கூறுவார்களா? தமிழன் ஜனவரி ஒன்றையும் கொண்டாட கூடாது என்று டிசம்பர் கடைசியில் வந்து தொண்டை கிழிய கத்துவார்களா? ஹிந்துக்களை தமிழர்கள் இல்லை என்பது போல் கூறும் இவர்கள் இங்கு தமிழ்நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்களையோ இஸ்லாமியர்களையோ தமிழர்கள் இல்லை என்பார்களா? ஊருக்கு இளிச்சவாயன் இந்து.. அதனால் எல்லோரும் அவனை மட்டம் தட்டி அவனின் பண்டிகைகளை நக்கலாகத்தான் பேசுவார்கள். அதிலும் சித்திரை ஒன்று என்னும் தமிழர் புத்தாண்டை கூட இந்துக்களுக்கு மட்டுமானது என்பது போல் விசமத்தனமாக பேசுவது இவர்கள் மக்களின் மனதில் என்ன விதமான எண்ணத்தை விதைக்க நினைக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்த்துகிறது.
இவர்கள் சொல்ல வருவது ஆரியர்களின் சூழ்ச்சியால் நாம் சித்திரையை புத்தாண்டாக கொண்டாடுகிறோம் என்பது. ஆரியர்கள் என்ன சூழ்ச்சி செய்தார்கள் இதில் என்று எனக்கு புரியவில்லை. நாம் கும்பிடும் மாரியம்மன், காளியம்மன் போன்ற சிறு தெய்வங்களை ஆரியர்கள் வணங்க மாட்டார்கள். நம் முருகன் கூட அவர்களுக்கு சுப்ரமணியன் தான். மாரியம்மனும் காளியம்மனும் தமிழர்களின் தெய்வங்கள். இந்த கோயில்களில் ஆரியர்கள் சம்பளத்திற்கு பூஜை செய்தாலும் நம்மை போல் வணங்க மாட்டார்கள். நாம் வணங்கும் மாரியம்மன் காளியம்மன் மற்றும் சிறு தெய்வ கோயில்களில் திருவிழாக்கள் எந்த மாதங்களில் நடக்கின்றன? பங்குனி முதல் சித்திரை வரை தமிழனின் திருவிழா. பங்குனியிலும் சித்திரையிலும் ஏன் தமிழன் கோயில் திருவிழாக்களை வைத்தான்? சும்மா பொழுது போகாமலா? தன் விவசாய தொழில் ஆரம்பிக்கும் இந்த காலத்தில், தான் கோயிலுக்கு போய் கடவுளிடம் ஆசி பெற்று தொழிலை ஆரம்பிக்கிறான். சம்பந்தமே இல்லாத தையில் எந்த கோயிலில் திருவிழா நடக்கிறது? எல்லாவற்றையுமே கடவுளோடு இணைக்கும் தமிழன் தன் புது வருடத்தை கடவுளோடு இணைக்காமல் இருந்திருப்பானா? தமிழும் மலயாளமும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை ஒரே மொழியாக இருந்தன. அத்தகைய மலயாள மக்கள் சித்திரையில் தான் தங்கள் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். அவர்களும் பார்ப்பன அடிமைகளா?
சரி, இதெல்லாம் வரலாறு மற்றும் ஒவ்வொருவரின் எண்ணங்களை வைத்து அமைவது. இப்போது அரசியலுக்கு வருவோம்.. 1921ல் சில அறிஞர்கள் எல்லாம் சேர்ந்து தை தான் தமிழ் புத்தாண்டு என முடிவு செய்தார்களாம். அதை ஐந்து முறை முதல்வராக இருந்த ஒருவர், 4 முறையும் ஞாபகமே இல்லாமல் தான் ஐந்தாவது முறை பதவிக்கு வரும் போது மட்டும், மண்டையில் திடீரென பல்ப் எரிந்து “இனி தை 1 தான் தமிழ் புத்தாண்டு’ என்று அறிவித்தாராம்.. ஆனால் அவர் ஆட்சியிலேயே தை ஒன்றை தமிழ் புத்தாண்டாக அறிவித்த பின்னரும் கூட சித்திரை ஒன்றுக்கு லீவு விடுவாராம். இது தான் அவரின் இரட்டை வேசம். ஏன் லீவு என்று கேட்டால் “சித்திரை திங்கள் விடுமுறை” என்பார். அப்போ வைகாசி திங்கள், ஆனி திங்கள் மார்கழி திங்களுக்கெல்லாம் லீவு விடுவாரா என்று யாரும் அவரிடம் கேள்வி கேட்க கூடாது. ஏன்னா, அவர் தான் ’தி ஒன் அண்ட் ஒன்லி தமிழன தலிவர்’.. கேள்விகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அவர் சொன்னதுக்கு எதிரா கேள்வி கேட்டா நீங்க தமிழின துரோகி ஆகிருவிங்க.. பார்ப்பன அடிவருடினு ஒரு எக்ஸ்ட்ரா பட்டமும் சேர்ந்து கிடைக்கும்.
சரித்திரம் என்பதே யாரோ ஒருவர் தன் கற்பனையை சேர்த்து சொன்ன ஒன்றை, எல்லோரும் உண்மை என நம்பிக்கொண்டிருப்பது தான். அத்தகைய சரித்திர ஆராய்ச்சி என்பது புதிதான, வழக்கத்தில் இல்லாத ஒன்றை பற்றி இருக்கலாம். ஏற்கனவே காலம் காலமாக சித்திரையில் கொண்டாடி வருவதை பற்றி ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும்? சரி அந்த ஆராய்ச்சியில் தமிழன் தை மாதத்தில் தான் புத்தாண்டு கொண்டாடினான் என்பதற்கான ஆதாரம் ஏதாவது இருக்கிறதா என்றால் எதுவும் இல்லை. வெறும் ஊகங்கள் தான். இவர்கள் வெறும் ஊகத்தை வைத்துக்கொண்டு தையில் புத்தாண்டை கொண்டாட சொல்வார்களாம். நாம் பல ஆயிரம் ஆண்டுகளாக கொண்டாடி வருவதை நிறுத்திவிட்டு இவர்கள் பின் வாலை ஆட்டிக்கொண்டு செல்ல வேண்டுமாம். தமிழனை என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என தெரியவில்லை.
சுருக்கமாக, தமிழன் தன் கடவுள்களுக்கு இளவேனில் காலத்தில் பண்டிகை வைத்து தன் தொழிலை ஆரம்பித்து கொண்டாடிய மாதமான சித்திரையில் தான் அவனின் புத்தாண்டு தொடங்குகிறது. தை என்னும் அறுவடை மாதத்தில் அவன் தனக்கும் தன் தொழிலுக்கும் உதவி செய்த சூரியனுக்கும் மாடுகளுக்கும் நன்றி சொல்கிறான். அதுவும் ஒரு சிறப்பான முக்கியமான பண்டிகை தான் என்றாலும் அது நம் புத்தாண்டோடு சம்மந்தப்பட்ட விசயம் இல்லை. தமிழர்களாகிய நம் புத்தாண்டு சித்திரை ஒன்றே...
மிக சீரியசான பின்குறிப்பு:
ஜனவரி ஒன்றோ, தை ஒன்றோ, சித்திரை ஒன்றோ - புத்தாண்டு என்று கொண்டாடப்படும் நாள் வெறும் இன்னொரு நாள் தான். அதே சூரியன், அதே வெயில், அதே வேலை, அதே குடும்பம், அதே மின்வெட்டு, அதே உலகம், அதே டிராஃபிக், அதே ஆஃபிஸ், அதே டென்சன் என எல்லாமே மாற்றம் இல்லாமல் முந்தைய நாள் நடந்தது தான். அடுத்த நாளும் நடக்கப்போவது தான். புத்தாண்டில் எதுவும் மாறிவிடப்போவதில்லை. பின் புத்தாண்டை மட்டும் மாற்றி என்ன ஆகிவிடப்போகிறது? நாட்டில் நாம் சண்டை போட எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன.. ஒரு அரசியல்வாதி சொன்னார் என்கிற ஒரே காரணத்துக்காக, நம் பழக்க வழக்கங்களை அறியாமல் அவர் சொல்வதை கேட்டு அப்படியே பின் செல்வது எந்த வகையில் சிறந்தது என தெரியவில்லை. "
ராம் குமார் அருமையான பதிவு....ஆனா ஹிந்து துவத்த பத்தி கொஞ்ச எக்ஸ்ட்ரா பேசுற மாதிரி தோனுச்சு......பட் அது ஒன்னு பெரிய விஷயம் இல்ல.....
என்ன நாள இருந்த என்னங்க....????
கொண்டாட ஒரு நாள் கெடச்சா கொண்டாட வேண்டியது தானே...???
என்ன நா சொல்றது செரிதானே ?

தை மாதம் பற்றி அருமையான குறிப்புகள்....!
ReplyDeleteதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....
அர்மேனியா பற்றி எழுதுங்களேன்.
என் அடுத்த பதிவு அர்மேனியா பற்றியே....
ReplyDeleteபடித்ததில் பிடித்தது... நல்ல பகிர்வு
ReplyDeleteநன்றி மாம்ஸ் .....
Delete